ஏரி,குன்று, உட்புறத் தோட்டம், வெளிப்புறத் தோட்டம், உப்பகற்றப்பட்ட நீர்

     மாத்ரிமந்திர் ஏரியின் கருப்பொருளின் மூலங்களைப் பற்றி புரிந்துகொள்ள, மாத்ரிமந்திர் ஏரிப் படுகை மண்ணைக் கொண்டு அமைக்கப்படும் குன்று, ஒட்டியுள்ள பூங்கா, அது பெரும்பாலும் “வெளிப்புறத் தோட்டங்கள்“ என்று குறிப்பிடப்படுகின்றது ஆகியவை பற்றிய சில ஆவணங்களை நாம் இங்கே அளிக்கின்றோம்:

அ) 25.06.1965 அன்று மாத்ரிமந்திர், மாத்ரிமந்திர் நுழைவுவாயில்-நடைபாதை, மாத்ரிமந்திர் ஏரி, வெளிப்புறத் தோட்டங்கள், குன்று ஆகியவற்றைக் காட்டும் வரைபடத்தை ஸ்ரீ அன்னை வரைந்தார்.

ஆ) 17.07.1977 அன்று ரோஷேவிற்கு நாரத் எழுதிய கடிதம், ஸ்ரீ அன்னையின் வரைபடத்தை விளக்குதல், குன்றுக்கான உத்தேச இடத்தைப் பற்றி ரோஷேவிடம் விவாதித்தல்.

இ) ஹுட்டாவுடன் ஸ்ரீ அன்னை உரையாடல், அவ்வுரையாடலுக்கு பிறகு, அவர் எடுத்த குறிப்புகளின்படி.

ஈ) 1973 செப்டம்பர் முதல் மாத்ரிமந்திர் தொடர்பாக ரோஷேவின் அலுவலகம் தயாரித்த ஓர் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். அச்சமயத்தில் ஸ்ரீ அன்னை இருந்தார் என்பதை தயவுசெய்து அறியவும். இக்குறிப்பு வெளிப்புறத் தோட்டங்களின் அளவுருக்கள், அமைவிடங்கள் குறித்து விவரிக்கிறது.

உ) 01.09.1965 அன்று ரோஷேவிற்கு நடா எழுதிய கடிதம், மாத்ரிமந்திர் ஏரி பற்றிய ஓர் ஆய்வை நடத்தும்படி ஸ்ரீ அன்னை கேட்டுக்கொண்டார். அதுபற்றி தமது ஆய்வுகளின் முடிவுகள் குறித்து தெரிவித்துள்ளார்.

மாத்ரிமந்திர் ஏரியின் பரப்பு 100,000 சதுர மீட்டர் என நடா கணக்கிட்டுள்ளார் என்பதை தயவுசெய்து அறியவும். நீண்டகாலத்திற்கு முன்பு அச்சமயத்தில்கூட, சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் ஒரு சாத்தியமான விருப்பமாக இருந்துள்ளது என்பதையும் தயவுசெய்து கவனிக்கவும். மாத்ரிமந்திர் ஏரிக்கு நீர் ஆதாரமாக சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் இருக்கும் என்பதை நடா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

ஊ) 31.10.1965 அன்று ஸ்ரீ அன்னைக்கு நடா எழுதிய கடிதம், அதில் அவருக்காக செய்யப்பட்ட நீரியல் ஆய்வின் முடிவுகளை ஸ்ரீ அன்னையிடம் அளித்தார். அவரின் அகக்காட்சியின்படி கடல்நீர் சுத்திகரிப்பு பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை கவனிக்கவும்: “அன்னையே, தங்கள் அகக்காட்சியில் கண்டுள்ளபடி, கடல்நீரைச் சுத்திகரிப்பு செய்வதன்மூலம் குடிநீரைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.“

எ) எதிர்கால மாத்ரிமந்திர் ஏரிக்கான அளவுருக்களை நிர்ணயித்தல் குறித்து, 11.10.2005 அன்று ரோஷே அவர்களின் சுருக்கமான விளக்கம்.

   

இப்போதைக்கு, மாத்ரிமந்திர் ஏரி விஷயம் குறித்து விவாதிக்க, கூடுதல் தகவல்களை கொடுப்பதற்காக மட்டுமே இந்த ஆவணங்களை இங்கே நாம் அளிக்கின்றோம்.

 

 

                                              அ) ஸ்ரீ அன்னையின் வரைபடம்

Mother's sketch

 

                              ஆ) 17.07.1977 அன்று ரோஷேவிற்கு நாரத் எழுதிய கடிதம்

                                   

                     மாத்ரிமந்திர்

                   “அமைதி“ ஆரோவில்

                                 17.10.77

 

அன்பார்ந்த ரோஷேவிற்கு,

ஸ்ரீ அன்னை வரைந்த வரைபடத்தின் ஜெராக்ஸ் காப்பி எடுக்கப்பட்ட நகலை 25.06.1965 அன்று நான் பெற்றுக்கொண்டேன். ஹுட்டாவிடம் இதன் அசல் வரைபடம் உள்ளது, சில ஆண்டுகளுக்கு முன்பு இவற்றை நான் புகைப்படம் எடுக்க முடிந்தது. வரைபடத்திற்கு நான் எண் கொடுத்து உள்ளேன்.

 

  1. ஏரி அகழ்வு செய்யப்பட்ட இடத்திற்கு வடமேற்கில் “மலையை“ அமைக்கவேண்டும். வடமேற்கு பக்கம் அப்பகுதியின் மிகத் தாழ்வான பகுதியாகும். மேற்கு சற்று தாழ்வானது ஆகும். வடக்கில் மலை இருக்கவேண்டும் என்று நான் எப்போதும் கருதியிருந்தாலும், இது ஒரு எண்ணம் மட்டுமே, அது நிலத்தோற்றத்திற்கு இணக்கமாக இருக்கவேண்டும் என்றும் நான் நம்புகின்றேன். மாத்ரிமந்திருடன் மலை போட்டியிடக் கூடாது என்ற யோசனை தெரிவித்த தங்களின் கடிதமும் அதே உணர்வை கொண்டு வருகின்றது. வடக்கில் மலை அமைக்கப்பட்டால், மாத்ரிமந்திர் வந்து அமைவதற்கு முன்னதாக அது நுழைவு வழியாக இருக்கக் கூடாது, ஆனால் முழுமைபெற்ற மாத்ரிமந்திரின் அனுபவத்தை ஒருவர் பெற்றபின் இருக்கலாம்.

  2. நுழைவு வழி மேற்கிலிருந்து இருக்கவேண்டும் என்று ஸ்ரீ அன்னை கூறினார். இன்றைக்கு சரியாக இது போலத்தான் வரைபடத்தில் இருக்கிறது.

   3. மாத்ரிமந்திரைச் சுற்றி ஏரி. ஏரியைத் தொடங்க அணை உள்ள இடத்திற்கு நகர்த்த நாம் அனைவரும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க அநேக சரியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

  4. சுற்றுவட்டப் பகுதிகளில் உயர்ந்த மரங்களின்   பகுதி இருக்கவேண்டும் என்ற ஸ்ரீ அன்னை விருப்பத்தின்படி இப்போது நடப்பட்டு வரும் “வெளிப்புறத்“ தோட்டங்களின் பகுதிகளுக்குத் தொடர்பு உடையதாகவும் இருக்கும்.

 

   இதுபற்றிய தங்களின் மேற்பட்ட சிந்தனைகளை எனக்குத் தெரியப்படுத்தவும். தென்மேற்கில் மலை இருக்கவேண்டும் என்று கருதுவோர் மிக நல்ல காரணங்களைக் கொண்டுள்ளனர். தென்மேற்கு பக்கத்தில் அது 3-4 மீட்டர் அளவிற்கு மிகவும் உயர்ந்த இடமாக இருப்பதால், அதுவே மலைக்கான இயற்கையான இடம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இரண்டாவது, மலைக்குள் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டால், கூடுதல் உயரம் மிக அதிக புவியீர்ப்பு உள்ளீட்டை அளிக்கும். அவை நல்ல காரணங்கள், ஆனால் நான் முதலில் மாத்ரிமந்திரின் முக்கியத்துவமான தோற்றத்தை பார்க்காமல் கண்ணைத் திசைதிருப்பும் எதையும் எதிர்கொள்ளும் போதிய வலுவின்மையை நான் உணர்கிறேன்.

 

தங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

 

                                   நாரத்

  

 

 

 

 

                                இ) ஹுட்டாவுடன் ஸ்ரீ அன்னை உரையாடல், குறிப்புகள்

25.06.1965 அன்று ஸ்ரீ அன்னை ஹுட்டாவுடன் உரையாடல், ஒருமைப் பூங்கா, ஏரி ஆகியவற்றால் சூழப்பட்ட மாத்ரிமந்திரின் பல வரைபடங்களை அவர் முன்னே வரைந்தார்

இத்துடனான உரையாடல்:

 

ஆ! இப்போது அன்னை மண்டபம். இது ஏரி, உயர்ந்த மரங்கள், பல்வேறு வகையான மலர்களுடைய தோட்டங்களுடன் சூழப்பட்டுள்ள ஒரு தனித் தீவாக இருக்கும். அன்னை மண்டபத்தின் வெளிமாடத்தின்மீது சிவப்பு செம்பருத்தி (ஆற்றல்) கொடிகளை நான் முக்கியமாக விரும்புகிறேன். வெள்ளைநிற சலவைக்கல்லில் அவை உயிர்ப்புள்ள அணிகலன்கள் போல காட்சியளிக்கும்.

அங்கே ஜப்பானிய பாணியிலான பாறைத் தோட்டங்கள் இருக்கும், அவற்றில் பல்வகை சப்பாத்திச் செடிகள், சிறு அருவிகள், அல்லிகள், தாமரைகளுடன் கூடிய சிறு குளங்கள், சிறு பாலங்கள், பல்வேறு வகையான நீரூற்றுகள், சலவைக்கல் சிலைகள் – அவற்றில் ஆழ்ந்த மெய்மறந்த நிலையில் உள்ள சிவனும் அவற்றுள் ஒன்று. அவருடைய படர்ந்தமுடி நீரூற்றைப் போல நீரைப் பாயச்செய்கிறது…

அங்கே ஒரேயொரு நுழைவு மட்டுமே இருக்கும். விலையுயர்ந்த, பாதி விலையுயர்ந்த மற்றும் செயற்கைக் கற்களை நுழைவிலிருந்து அன்னையின் மண்டபம் வரையில் தரவரிசையில் பதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை யாவற்றுக்கும் முழு அர்த்தம் உண்டு.

 

ஆலயம் பரந்த பகுதியைக் கொண்டிருக்க வேண்டும் – இது போல (ஸ்ரீ அன்னை தமது கைக்குட்டையை எடுத்து தம் உள்ளங்கையில் வைத்து கையை மூடினார்), மிகச் சிறியது அல்ல. அத்துடன் அங்கு அமைதிப் பகுதியும் இருக்கவேண்டும். இப்பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடாது, அங்கு எந்த வகையான சத்தமும் இருக்கக் கூடாது.

 

ஒருமைப் பூங்கா பன்னிரெண்டு தோட்டங்களாகப் பிரிக்கப்பட வேண்டும், அவை எல்லாம்வல்ல அன்னையின் பன்னிரெண்டு பண்புகளை குறிக்கின்றன.

 

இத்தோட்டங்களில் பல்வேறு வகையான மலர்கள் இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் – குறிப்பாக பல்வேறு வகையான செம்பருத்தி மலர்கள் – தெய்வீக உணர்வு.

 

மற்றொரு பக்கத்தில், தோட்டங்களின் எல்லை நோக்கி, பனைகள் போன்ற பெரிய மரங்கள், பல்வேறு வகை பெரணிகள், வேம்பு, இந்திய மரமல்லி மரங்கள், தைல மரங்கள் மற்றும் பல அழகிய பெரிய மரங்கள் – அவை யாவும் ஒருமை மற்றும் ஆர்வத்தை குறிக்கின்றன.

 

ஏரி தோண்டப்படும் பொழுது, ஒரு சிறு மலை போல காட்சியளிக்க மண் எல்லாவற்றையும் ஒரு பக்கத்தில் சேகரித்து வைக்கவேண்டும், அங்கே தேவதாரு மரங்கள் இருக்கும். பாருங்கள், எதிர்காலத்தில் அங்கே பனி இருக்கும்.


அன்னையின் மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு உயர்ந்த மரத்தின் கீழே சிறிய சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட இருக்கைகள் இருக்கும். இத்திறந்தவெளியில் மக்கள் தியானம் செய்யலாம், இயற்கை அன்னையின் எல்லையற்ற பரப்பில் ஒன்றியிருக்கலாம் – எண்ணிறந்தநிலையின் அன்னை மற்றும் அவளது படைப்பு.

 

 

      ஈ) 1973 செப்டம்பரில் ரோஷேவின் அலுவலகம் தயாரித்த ஓர் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

 

செப்டம்பர் 1973 மாத்ரிமந்திர் தொடர்பான ஒரு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்

 

ரோஷே அலுவலகத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது

 

தோட்டங்களைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறியவை என்ன?     

            

மாத்ரிமந்திர் தோட்டங்களில் இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பகுதிகள் இருக்கும், மாத்ரிமந்திர் மையப் பகுதியின் பதின்மூன்று தோட்டங்கள், மாத்ரிமந்திர் பகுதியைச் சுற்றியிருக்கும் வெளிப்புறத் தோட்டங்கள், சுமார் 100 மீட்டர் அகலத்தில் ஒரு வளையமாக இருக்கும். இந்த வெளிப்புறத் தோட்டங்கள் நகரப் பகுதியைச் சுற்றிசூழ்ந்து அடங்கியிருக்கும் என்று வரையறுத்து இருந்தாலும், நகரப் பகுதியில் விரிவடைந்து, தரையிலும் கட்டிடங்களின் மூலமாகவும் அவற்றின் மேலும் ஊருருவிச் செல்லும். நகரப் பகுதிக்குள் தொடர்ச்சியான வடிவமும் இயக்கமும், வெளிப்புறத் தோட்டங்களினுள் நகரப் பகுதியின் ஊடுருவலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைச் செய்யும். மேலும் ஒன்றுக்கொன்று ஊடுருவலானது, நகரப் பகுதியின் மூலமாக அதன் வெளிப்புற எல்லை வரை நீட்டிச் செல்லும், நகரம் ஒரு பசுமை வளையப் பகுதியினை எல்லையாகக் கொண்டிருக்கும், அதனால் நகரம் முழுவதும் மரங்கள், வெளியிலிருந்து வரும் நீர் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஏற்படுத்தும், நகரம் முழுவதும் மரநிழல்களையோ அல்லது தண்ணீரையோ இழந்துவிடாமல், மையத்திற்கு படகு மூலமாகவோ அல்லது நடந்தோ செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மூன்று தொடர்புடைய பகுதிகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

  1. 1.மாத்ரிமந்திர் பகுதி. படம் 2-இல் காட்டியுள்ளபடி, ஒரேயொரு ஆலமரத்துடன், நீள்வட்டத்தில் செதுக்கப்பட்டு உள்ளே அமைக்கப்பட்ட, தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் மலர்கள் வரிசையுடனான பதின்மூன்று தோட்டங்கள், மாத்ரிமந்திரைச் சுற்றி மண்ணால் வார்ப்புசெய்யப்பட்ட பொதுமைய அலைகளைப் போல இருக்கும். இப்பகுதி கலைத்துவ படைப்புடன் இருக்கும். (மையப் பகுதியில் இருந்து பன்னிரெண்டு பிரகாசமான பாதைகள், மாத்ரிமந்திர், பொதுமைய பாதைகள், மாத்ரிமந்திரின் தனித்துவம் மேலோங்கிய நிலையை அளிக்கும் அலை வடிவ நில அமைப்பு).

 

  1. 2.வெளிப்புறத் தோட்டங்கள். மாத்ரிமந்திர் பகுதியை உள்ளடக்கியது, வரையறுக்கப்பட்டது, அதைச் சுற்றி நீர், மரங்கள் சூழ்ந்து அதை ஒரு தீவாக வடிவமைக்கும். வெளிப்புறத் தோட்டப் பகுதி முறைசாராது, இயற்கையாக தாவரங்கள் இருக்கும், ஆனால் அவை கட்டுப்படுத்துப்படும். இந்நீர்நிலை இப்போது ஒரு நீரோடை அல்லது கால்வாய் போன்றுள்ளது, இப்போது ஓர் ஏரி போன்ற அகலமுள்ளது, இது சிறுதீவுகளுடன் தொங்கு மரங்களுடன் வட்டமாக வளர்ச்சியுறும் ஓர் இடமாகும். மரங்களால் உண்டாக்கப்பட்ட, ஒட்டுமொத்த வடிவத்தின் தாக்கத்தால், அதன் பல்வேறுபட்ட உயரமும் நிறங்களும் வடிவங்களும், செயற்கையான குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் மண் வடிவமைப்பினால் உருவாக்குதல், அது அளவில் சிறியது என்றாலும் அதன் தாக்கம் கணிசமானது, ஓர் ஏந்துதட்டில் மாத்ரிமந்திர் உள்நிற்கும், அதன் உயர்விற்கு அது வலுசேர்க்கும்.

 

  1. 3.கட்டிடங்களை ஒட்டியுள்ள பகுதி. வெளிப்புறத் தோட்டங்களைச் சுற்றியுள்ள இடம் நகரப் பகுதியில் தோட்டங்கள் ஊடுருவுகின்ற இடம் ஆகிய இரண்டிலும், மரங்களும் நீரும் கட்டிடங்களின் விளிம்புகளை மென்மைப்படுத்தும், நகர இடைவெளியின் மூலமாக அலையலையாய், மேலும் அதனுள்ளும் செல்லும். தாக்கத்தை ஏற்படுத்துவதில் இது நகரப் பகுதியின் அனைத்து நில அழகு வேலை சம்பந்தப்பட்டுள்ளது, நில அழகு வேலையைத் தனிமைப்படுத்தி அதன் கட்டடக்கலை வடிவமைப்பை எண்ணிப்பார்க்க முடியாது.

 

இந்த அறிக்கையில், நில அழகு வேலை செய்யும் வழிகள் குறித்த ஆலோசனை விவாதிக்கப்பட்டிருந்தாலும், இப்பகுதி அதுபற்றியது அல்ல.

                                      

 

             

 

 

 

உ) 01.10.1965 அன்று ரோஷேவிற்கு நடா எழுதிய ஒரு கடிதம்.

 

பிரஞ்சு மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

 

Letter from Nata to RogerLetter from Nata to Roger

 

ஆசிரமம், 01.10.1965.

அன்பார்ந்த ரோஷேவிற்கு,

இந்த முதல் அறிக்கை செயற்கை ஏரியின் பிரச்சினை பற்றியது.

தங்களின் நகரத் திட்டத் தயாரிப்பு நிறைவேற்றத்தில் அதன் பயன்பாட்டைக் கருதி, செய்யப்படவேண்டிய விஷயங்களை வரிசைப்படுத்தி அவற்றை முதலில் கொடுத்துள்ளேன்.

சலிப்பான கணக்கீடுகள் விவரங்களை நான் தங்களுக்கு கொடுக்கமாட்டேன். எனக்கு முக்கியமானவை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ள வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றை பாரீஸில் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆயினும், பெறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நகரத் திட்டமிடல் ஆய்வைவிட நீரியியல் ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

தேசிய கட்டிடங்கள் நிறுவனத்தின் தகவல்படி, சென்னைப் பகுதியில் ஆண்டு மழையளவு 1,234.44 மி.மீ.

ஆவியாதல் தரவு முற்றிலும் மதிப்புமிகுந்த அறிவியல்பூர்வமாக பெறப்பட்டவை.

நேரடி கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மூலம் பெறப்பட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் இருந்து பெறலாம் என்று நான் நம்புகிறேன், ஆனால், இங்கே கீழே நான் எழுதி உள்ளவற்றோடு அதிகம் வேறுபடாது என்று நான் நினைக்கிறேன்.

பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவியாகக்கூடிய 951,56 மி.மீ. அளவு போதிய நீரை ஏரியில் ஒருவர் நிரப்பவேண்டும்.

ஆகவே, நடைமுறைக்கேற்ற யோசனையை உடனடியாக தாங்கள் பெறலாம், 100,000 ச.மீ. மேற்பரப்பு உடைய ஓர் ஏரியை நீங்கள் தீர்மானித்தால், அதில் ஒருவர் ஆண்டுக்கு தோராயமாக 95,000 க.மீ. நீரை நிரப்ப வேண்டும்.

இதுதவிர, முதல்தடவை நிரப்புவதற்கு ஒருவர் மழைப்பொழிவை சார்ந்திருக்க முடியாது: ஒருவர் செயற்கை வழிகளையே முழுவதும் சார்ந்திருக்க வேண்டும்; அதாவது ஆழ்கிணற்றில் இருந்து வரும் அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்துவரும் நீரைக்கொண்டு ஒருவர் ஏரிக்கு தண்ணீரை நிரப்பவேண்டும்.

இவ்விஷயத்தில், ஏரியின் ஆழம் 3 மீட்டராக (சராசரி ஆழம்) இருக்கவேண்டும், முதல் தடவை நிரப்புவதற்கு தேவையான தண்ணீரின் அளவு 300,000 க.மீ.

ஆண்டு அளவை ஒரு மணிக்கான அளவாக மாற்றினால், ஆவியாதல் இழப்பை ஈடுகட்டத் தேவையான நீரின் அளவு நமக்கு 11 க.மீ./மணி தேவை, அதேசமயம், முதல் தடவை நிரப்புவதற்கு, ஒரு மாதம் முழுவதற்கும் 417 க.மீ./மணி நமக்குத் தேவை.

கடல்நீர் சுத்திகரிப்புக்கு ரூ.0.60./க.மீ. செலவாகும் என்று இப்போது நீங்கள் நினைத்தால் (நிஜத்திற்கு மிக நெருக்கமான விலையாக இருக்கலாம்), நிரப்புவதற்கு ரூ.180,000 செலவாகும், பராமரிப்புச் செலவு ஆண்டுக்கு ரூ.57,000 ஆகும்.

பின்வருவன சம்பந்தமாக ஒருவர் குழப்பம் அடையாமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும்:

செயற்கையாக நீர் நிரப்பப்படவில்லை எனில் 12-இல் 10 மாதங்கள் ஏரி காலியாக இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது – இதற்கு மாறாக, ஆரோவில் அமைந்துள்ள பகுதியில், பல சிறிய ஏரிகளில் மழைநீரைத் தவிர வேறு எந்த நீரும் நிரப்பப்படாமல் ஆண்டிற்கு 6 மாதங்கள் ஏரியில் நீர் இருப்பதை எவரும் காணலாம்.

ஆயினும் நமது விஷயம் வேறுபட்டது.

தண்ணீர் வரும் துணை நீர்வழிகளுக்கும் ஏரியைவிட மிகப் பெரிய நீர்ப்பரப்பு பகுதியை உருவாக்கும் படுகைக்கும் எந்தவித சாத்தியக்கூறும் இல்லாமல், நமது ஏரி நகரின் நடுவில் அமைந்துள்ளது.

நமது ஏரியின் சரியான நீர்மத்தளத்திற்கு பெறப்படும் மழை நீர்வரத்து உதவி வரம்புக்கு உட்பட்டது.

தங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவையெனில் அதைத் தங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறேன்; தயவுசெய்து எனது நட்பின் பொருளை தாங்கள் ஏற்றுக்கொள்ளவும்.

நடா

 

ஊ) 31.10.1965 அன்று ஸ்ரீ அன்னைக்கு நடா எழுதிய ஒரு கடிதம்
பிரஞ்சு மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Letter from Nata to the MotherLetter from Nata to the MotherLetter from Nata to the Mother

ஆசிரமம், 31.10.1965.

அன்னையே,

 

ஆரோவில்லில் நீரியல் நிலைமை குறித்த அறிக்கை

 

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆரோவில்லிற்கான இரண்டு திட்டங்களில் முதலாவது அறிக்கை சம்பந்தமாக இங்கே அளிக்கிறேன்: நீரியல் திட்டம் மற்றும் மின்சாரத் திட்டம்.

 

இவ்விரண்டில் முதலில் நாங்கள் நீரியல் கேள்வி குறித்து அணுகினோம்.

 

அதன் தீர்வு நீரியல் பிரச்சினைக்கு முந்தைய தீர்வாக இருக்கவேண்டும் என்பதால், இதற்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்தோம். இதன் ஆராய்ச்சி தரவு முழுவதும் களத் தகவலைச் சார்ந்துள்ளது, தற்போதுள்ள கிணறுகள், மேலும், முடியுமானால், மிகப் பெரிய நீர்ப்பரப்பு படுகை ஆகியவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றிய ஒரு கவனமான ஆய்வு.

 

இவை யாவும் ஆழ்கிணறுகளில் இருந்து நீரை எடுத்து ஆரோவில்லிற்கு விநியோகிக்கும் சாத்தியக்கூறு பற்றி ஆழமாக அறிந்திட, அல்லது மற்ற தீர்வுகளை தேர்ந்தெடுக்க நமக்கு உதவும்.

 

அதன்பிறகே, நீரியல் ஆய்வினை நாம் அணுக முடியும்.

 

கடல்நீரைச் சுத்திகரிப்புச் செய்து குடிநீரைப் பெறும் தங்களின் அகக்காட்சியின் சாத்தியக்கூறும் அங்கே இருக்கிறது. அதற்கு யுஎஸ்ஏ-வில் ஒரு உந்துதல் கொடுத்ததால் - இப்போது அது மிகப் தொன்மையும் மிக நவீனத்தையும் உடைய செயல்முறையாக உள்ளது, ஆனால், அது இன்னும் ஒரு பரிசோதனைக் கட்டத்திலேயே உள்ளது, சாத்தியமும் பொருளாதாரச் சிக்கனமும் உள்ள ஒரு முறைமை இன்னமும் இதுவரை கண்டறியப்படவில்லை, பல பெரிய தொழிற்சாலைகள் ஏற்கனவே நிலையங்களை அமைத்திருந்தாலும், அவற்றுள் வெஸ்டிங்அவுஸ், ஃபேர்பேங்க்ஸ் மோர்ஸ் ஆகியவற்றின் நிலையங்கள் மட்டுமே நன்கு செயல்படுகின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

 

இச்செயல்முறையில் உள்ள முக்கிய குறைபாடு என்னவெனில், மிக அதிகமான கொள்முதல் செலவும் அதிக உற்பத்திச் செலவும் ஆகும்.

 

இச்செலவுகள் பற்றிய ஒரு யோசனையை பெற, நிலையங்களை அமைக்கும் செலவு ஒரு கனமீட்டர் குடிநீருக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை செலவாகும், அதேசமயம் உற்பத்திச் செலவு ஒரு கனமீட்டர் நீருக்கு ரூ.0.70 ஆகும், பாண்டிச்சேரியில் ஒரு கனமீட்டருக்கு ரூ.0.10 என்பதை ஒப்பிட்டால் இது அளவுகடந்த விலையாகும்.

 

இதற்கு சரிசமமான சிரமங்கள், குழப்பும் பிரச்சினைகள் ஆகியவற்றை நாம் தொடவில்லை….

 

இத்தகைய சந்தர்ப்பங்களில், தீர்மானித்துள்ள பகுதியில் வேறு சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை (இயற்கை ஆதாரங்கள், நிலத்தடி, ஆறுகள், மற்றவை) என்ற காரணங்களால் “கடல்நீர் சுத்திகரிப்பு“ மட்டுமே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு, ஆழ்கிணறுகள் மூலமாக நீர் விநியோகம் செய்யும் சாத்தியக்கூறை ஆராய்வதில் அனைத்து முயற்சிகளையும் செய்ய தற்போது வழிகாட்டப்பட்டுள்ளது.

 

நீரியல் ஆய்வு

 

நெய்வேலியில்: கடலூரில் பெற்ற தகவல்படி, ஆரோவில் பகுதிக்கு தண்ணீர் அளிக்கும் நீர்ப்படுகை நெய்வேலி அருகே அமைந்துள்ளது என்று தோன்றுகிறது. இத்தாலி கம்பெனியான மான்டெகடினி-அன்சால்டோ இரசாயன உரமான யூரியாவைத் தயாரிப்பதற்கு ஒரு வளாகத்தைக் கட்டிவருகின்றது, அதன் உதவியுடன், தேவையான தகவலைப் பெற நாங்கள் நெய்வேலிக்குச் சென்றிருந்தோம்.

 

நெய்வேலியில் அதே பகுதியில் அமைந்துள்ள பெரிய தொழிற்சாலைகள் குழுமங்களுக்கு தேவையான அதிக நீரை இறைத்து வெளியேற்றுவதன் மூலமாக நீர்கொள்படுகைகள் காலியாவதற்கான ஆபத்து எப்போதும் இருந்தது.

 

அதிருஷ்டவசமாக, இதற்கு மாறாக, மிகுதியான நீரை அகற்றுவதில் சிரமம் உள்ளது என்பதால், தற்போது இந்த ஆபத்து இல்லை என்பதை நாங்கள் கவனிக்க முடிந்தது.

 

நிலத்தடியிலுள்ள பழுப்புநிலக்கரியை தோண்டியெடுக்க இந்த மிகுதியான நீரை அகற்றும் வேலை இன்றியமையாதது. அமைப்புகள் நீரில் மூழ்காமல் இருக்க, இரவும் பகலும் தொடர்ந்து இடைவிடாது இதற்காக 50 உயர்திறன் பம்புகள் தொடர்ந்து வேலை செய்கின்றன.

 

மிகுந்த உயர் அழுத்தத்துடன் நிலத்தில் இருந்து நீர் உயருகிறது. இது நமக்கு பொருத்தமான காரணியாக இருக்கிறது.

 

இக்காரணி நம்மைச் சிந்திக்க வைப்பது என்னவெனில், ஆரோவில் பகுதியிலுள்ள நீர்கொள்படுகை உண்மையிலேயே நெய்வேலியில் தோன்றுகிறது என்றால் (இதை உறுதிப்படுத்தி அறிந்துகொள்ள மிகவும் முதன்மையான புவியியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்), பிறகு, நியாயமான அளவில் பல ஆண்டுகளுக்கு ஆரோவில்லில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதை நாம் ஊகிக்க முடியும்.

 

ஒரு கூழாங்கல் பகுதியில் மிக உயர்ந்த வடிகட்டி திறனுடன் ஓரளவு பெரிய நீரியல் படுகைகளில் இருந்து நீர்கொள்படுகைகள் தோன்றுகின்றன என்பதை எல்லா அறிகுறிகளும் உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகிறது, அவற்றுள் நெய்வேலிதான் மிக அருகில் சுரண்டப்பட்டு வரும் இடமாக உள்ளது.

 

கடலூரில்: ஆரோவில் பகுதியின் ஆழ்துளை கிணறுகள் சார்ந்துள்ள வேளாண்மைத் துறையின் உதவி பொறியாளரிடம் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

 

நமது உரையாடலில் முடிவற்ற விவரங்களைக் கொண்டு தங்களுக்கு சலிப்பூட்ட நான் விரும்பவில்லை, ஆனால், நாங்கள் சேகரிக்க முடிந்த அனைத்து விவரங்களும் நிலத்தடியில் இருந்து சராசரியாக 75 மீட்டர் ஆழத்தில் இருந்து, சராசரியாக மணிக்கு 35 க.மீ. தண்ணீரை வெளியேற்றி பெறுவதற்கு உண்மையான சாத்தியக்கூறு உள்ளதை வெளிக்காட்டுகின்றன.

 

மருத்துவக் கல்லூரியில் 50மீ ஆழத்தில் ஒரு கிணறு உள்ளது, அதிலிருந்து அமுக்கி உதவியுடன் மணிக்கு 120க.மீ. தண்ணீர் கிடைக்கிறது (ஒரு பம்பு சுமார் 200க.மீ.: இது அதிகப்பட்சத்தைக் குறிக்கிறது).

 

7 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாத வரலாற்றுரீதியான தரவுப்படி, ஒரு கிணறு தவிர 20 ஆண்டுகளுக்கு முன்பு துளையிடப்பட்ட கிணறுகளில் தொடக்கத்தில் கிடைத்த அதே அளவு நீர் தொடர்ந்து கிடைத்து வருகின்றது.

 

இத்துறை இருந்துவரும் 7 ஆண்டு காலத்தில் இதுவரை துளையிடப்பட்ட கிணறுகள் எல்லாவற்றிலும் இருந்து தொடக்கத்திலிருந்து, சில பருவகால மாறுபாடுகளினால் தவிர, மற்றபடி அதே அளவு தண்ணீர் கிடைத்து வருகின்றது.

 

எனது அடுத்த அறிக்கையில், முதல்கட்ட ஆய்வு நிறைவு செய்யப்பட்டு முடிவுகளை அளிக்கலாம் என்று நான் நம்புகின்றேன், ஆகவே, கடல்நீரைச் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும சுவையான நீரா அல்லது ஆழ்கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீரா என்பதை தாங்கள் முடிவு செய்யலாம்.

 

நடா

 

                       எ) ரோஷே அவர்களின் சுருக்கமான விளக்கம், 11.10.2005 தேதியிட்டது.

 

     

ஆ) கட்டடக்கலைஞர் ரோஷே ஆன்ஷேவின் இறுதியான சுருக்க விளக்கம், 11.10.2005 தேதியிட்டது.

 

ஆரோவில்ஸ் பியூச்சர்

 

வடிவமைப்பு அளவுருக்கள் குறிப்பு

 

தேதி: 11-10-2005

 

பொருள்: மாத்ரிமந்திர் ஏரி

 

வடிவமைப்பு அளவுருக்கள்

 

நோக்கம் /செயல்பாடு:

  1. 1.மாத்ரிமந்திர், மாத்ரிமந்திர் தோட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் ஒரு தீவை உருவாக்குதல்.
  2. 2.மாத்ரிமந்திருக்கும் நகர மையத்திற்கும் இடையில் ஒரு தனிப்பட்ட பகுதியை உருவாக்குதல்.
  3. 3.நகர நீர் விநியோக அமைப்பின் ஒரு பகுதியாக இருத்தல்.

ஏரியின் மேற்பரப்பு அளவு:

சுமார் 162000 சதுர மீட்டர்கள்

ஆழம்:

அழகியல் நோக்கத்திற்காக: குறைந்தப்பட்சம் 2 மீ.

ஏரியின் உயர்மட்டம்:

நீள்வட்டப் பாதைக்கு மேலே 25 செ.மீ.

நீர்மட்ட மாறுபாடு:

மிக அதிக மட்டத்திற்கும் மிகக் குறைந்த மட்டத்திற்கும் இடையே அதிகப்பட்சம் 0.75 மீ.

மற்ற அளவுருக்கள்:

சமச்சீரான நீர்மட்டம்

நிலப்பகுப்பு:

இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும்

 

 

ஒப்புதல் அளிக்கப்பட்டது:

 

ரோஷே (கையொப்பம்)

 

இணைப்பு: வரைபடம்