ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் படைப்புகள் வெளியீடு

 

இரும்புத்திரை விழுந்ததும் தத்துவ மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை பொதுமக்கள் சுதந்திரமாக படிப்பதற்கு இரஷ்யா கதவுகளைத் திறந்துவிட்டது. மனச் சுதந்திரத்தின் புதிய பகுதிகளில் ஒரு தாக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர்களில் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவர். அதுவரை ஸ்ரீ அரவிந்தரின் அங்கீகரிக்கப்படாத வெளியீடு ஒன்றுடன் ஒருவர் பிடிபட்டால் அவர் சிறைக்கு அனுப்பட்டார், இரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் அவை இரகசியமாக விநியோகிக்கப்பட்டன.

இந்த அமைப்பு எளிமையானது: கம்யூனிச அமைப்புக்கு சாதகமாக இல்லாத எந்தவொரு இலக்கியமும் பொதுமக்களுக்கு கிடைக்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு சிறிய உயர்ந்தோர் குழுவிற்கு மட்டும் நூலகங்களில் எல்லா முக்கிய புத்தகங்களும் வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்களுக்கு எதுவும் கசியவிடப்படவில்லை, கம்யூனிச கட்சியின் அரசியல் அமைப்புக்கு சாதகமாக இல்லாத அனைத்து தத்துவ, ஆன்மீக அல்லது அரசியல் சிந்தனைகள் அவர்களுக்கு கிடைக்காத தூரத்தில் வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் சோவியத் யூனியனில் இக்கடினமான காலத்தின்போது இரண்டு திறப்புகள் உருவாயின, அவை ஸ்ரீ அரவிந்தருடன் பொதுமக்களுக்கு ஓரளவிற்கு தொடர்பைக் கொண்டு வந்தன. ஒன்று மாஸ்கோவில் இருந்த கல்வியாளர்களின் சிறுவட்டம், அவர்கள் அனைவரும் இரஷ்ய யூதர்கள் ஆவர், ஸ்ரீ அரவிந்தரின் படைப்புகளில் இருந்த பெரும் சாரத்தை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களில் ஒருவரான மீரா சல்கானிக், இரஷ்ய எழுத்தாளர் சங்கம் மற்றும் இந்தியாவிற்கான பண்பாட்டு பிரிவின் தலைவர் ஆவார். அதன்பிறகு ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டடிஸின் தலைவர் டாக்டர் ரிபகோவ், பேராசிரியர் கோஸ்டுசென்கோ மேலும் இரண்டு அல்லது மூன்று தத்துவவியல் பேராசிரியர்கள். அவர்கள் ஒரு தைரியமான திட்டத்தை வைத்திருந்தனர், அது ஆபத்தானது, ஆனால் புத்திசாலித்தனமானது. ஸ்ரீ அரவிந்தரின் தத்துவம் பற்றிய ஒரு புத்தகத்தை பேராசிரியர் கோஸ்டுசென்கோ எழுதினார், அது அவரின் சிந்தனைகளை விவரித்தது, அதில் முடிந்தமட்டும் பல மேற்கோள்கள் சேர்க்கப்பட்டன, ஆனால் இறுதியில் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி மாறுபட்ட கருத்தும் அதில் சேர்க்கப்பட்டது. ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டடிஸ் இப்புத்தகத்தை வெளியிட்டது, இதனால் ஸ்ரீ அரவிந்தர் இரஷ்யாவில் அறியப்பட்டார். இப்புத்தகம் வெளியாக வேண்டும் என்பதற்காகவே பேராசிரியர் கோஸ்டுசென்கோ எதிர்மறையான கருத்துக்களை இப்புத்தகத்தில் சேர்த்தார். அப்படியிருந்தும் இப்புத்தகத்தைப் படித்த பலருக்கும் இது ஆர்வத்தை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றுபவர்களாக ஆயினர்.

அதேசமயம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பியோட்ர் ஸோரின் அவர்களைச் சுற்றி ஒரு சிறுமக்கள் வட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கூடியது. அனைத்து தத்துவவியல் புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்த நன்கு பாதுகாக்கப்பட்ட நூலகங்களுடன் இவ்வட்டம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. ஸ்ரீ அரவிந்தரின் படைப்புகளை முதலில் அவர்கள் இரகசியமாக கையால் எழுதி நகல் எடுத்து அல்லது போட்டோகாப்பி எடுத்து அவற்றை கடத்தி வந்தனர். அதன்பிறகு, அவர்களால் முடிந்த அளவிற்கு, அவர்கள் புத்தகங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினர், இரஷ்ய பதிப்புகளை போட்டோகாப்பிகள் எடுத்து ஒரு குறுகிய வட்ட நண்பர்களுக்கும் ஒத்தகருத்து உடையவர்களுக்கும் விநியோகித்தனர். சமிஸ்டட் என்றழைக்கப்பட்ட இக்காலத்தின்போது, ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்களின் சட்டத்திற்கு புறம்பான பிரதிகளை வைத்திருந்து பிடிபட்ட பல இரஷ்யர்கள் சிறைக்குச் சென்றார்கள்.

இறுதியாக இக்குழு சத்பிரேமின் புத்தகமான “தி அட்வென்சர் ஆஃப் கான்சியஸ்னஸ்“ என்ற புத்தகத்தின் அசல் பிரஞ்சு பதிப்பை பெறமுடிந்தது. இரஷ்யாவின் இரகசிய நூலகங்களில் இப்புத்தகம் காணப்படவில்லை; இது பிரான்சிலிருந்து இரஷ்யாவிற்கு கடத்தப்பட்டு வந்தது. பல்வேறு வழித்தடங்களிலும் முறைகளிலும் இரஷ்யாவிற்கு எட்டு பிரதிகள் அனுப்பப்பட்டன, கடைசியில் அவற்றுள் இரண்டு மட்டுமே வந்து சேர்ந்தது. இப்புத்தகத்தை மொழியாக்கம் செய்வதற்கு இக்குழுவிற்கு எட்டு ஆண்டுகள் ஆயிற்று. பெரெஸ்ட்ரோய்கா மற்றும் கிளாஸ்நோஸ்ட் கம்யூனிசம் அல்லாத சிந்தனைக்கு திறந்தவிட்ட சிறிது காலத்தில் இந்த மொழிபெயர்ப்பு நிறைவு செய்யப்பட்டது. பின்னர் இப்புத்தகம் லெனின்கிரேடு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது, 100,000 பிரதிதிகள் அச்சிடப்பட்டன. அவை உடனே விற்றுத்தீர்ந்தன, மேலும் 100,000 பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இரஷ்யாவின் மற்ற பகுதிகளிலும் இப்புத்தகம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, உரிமைபெறாத வெளியீடுகள் வரத்தொடங்கின. சைபீரியாவில் உள்ள டாம்ஸ்கில் 100,000 திருட்டு பிரதிதிகள் வெளியிடப்பட்டன, தொடர்ந்து புதியதாக உருவான பதிப்பகங்களில் இருந்து ஏனைய பதிப்புகள் வெளிவந்தன.

இறுதியில் இரஷ்யாவில் இப்புத்தகம் மொத்தம் எத்தனை பிரதிகள் வெளிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன என்பதை மதிப்பிடுவது கடினம். ஆனால், இது அநேகமாக அரை மில்லியனைக் கடந்துள்ளது. உண்மையில் இன்றைக்கு ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அல்லது அவரின் ஒரு புத்தகத்தைப் பற்றி படிக்கின்ற உலகத்தின் அனைத்து மொத்த வாசகர்களைவிட அதிகமாக இரஷ்யர்கள் படித்துள்ளார்கள். அந்தநேரத்தில், இரஷ்யர் சிந்தனை விடுவிக்கப்பட்டபோது, கிழக்கு தொகுதி நாடுகளில், ஸ்ரீ அரவிந்தரின் புதிதாக எழுந்துள்ள இயக்கத்திற்கு ஒரு புத்தம்புதிய மூலகம் சேர்க்கப்பட்டது. ஸ்ரீ அன்னையால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமான ஆல் இண்டியா பிரஸ்ஸை மதன்லால் ஹிமத்சிங்கா மைக்கேலுக்கு விற்றுவிட்டார். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் அனைத்து படைப்புகளையும் இரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடும் நோக்கத்தில் அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு பதிப்பகத்தை அமைத்தார். சுமார் 10 மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் மீரா சல்கானிக்கும் ஒருவர், தி பவுண்டேஷன் ஆஃப் இண்டியன் கல்ச்சர், ஹிம்ன் டு தி மிஸ்டிக் ஃபையர், சீக்ரெட் ஆஃப் தி வேதாஸ், எஸ்ஸேஸ் ஆன் தி கீதா போன்ற புத்தகங்களை அவர் மொழிபெயர்த்தார். ஸ்ரீ அரவிந்தரின் நூற்கள் தொகுதிக்கு ஓர் அறிமுக உரையை பேராசிரியர் கோஸ்டுசென்கோ எழுதினார். பியோட்ர் ஸோரினின் மனைவியான வேலென்டினா லெட்டர்ஸ் ஆன் யோகா, ஸின்தெஸிஸ் ஆஃப் யோகா ஆகியவற்றை மொழிபெயர்த்தார். இப்புத்தகங்கள் முதலில் பாண்டிச்சேரியில் ஆல் இண்டியா பிரஸ்ஸில் அச்சிடப்பட்டன, ஆனால், கடைசியில் இரஷ்யாவிலேயே இப்புத்தகங்களை அச்சிடுவது மிகவும் சிக்கனமாக இருந்தது.

நீண்டகாலமாகவே பல தலைப்புகள் இன்னமும் மொழிபெயர்க்காமல் இருந்ததால், ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்களின் அசல் ஆங்கில பதிப்புகளுக்கு பெரும் தேவை இருந்தது. இத்திட்டத்திற்கு மதன்லால் பழைய இருப்பை நன்கொடை அளித்தார். ஒரு கொள்கலன் (கண்டெய்னர்) முழுவதும் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் ஆங்கில மற்றும் பிரஞ்சுப் புத்தகங்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரஷ்ய மொழியில் நிறைய தலைப்பில் புத்தகங்கள் கிடைத்தன, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் ஆங்கில மற்றும் பிரஞ்சு பதிப்புகளின் விற்பனை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர், ஸ்ரீ அரவிந்தரின் முக்கிய தலைப்புகளும், அத்துடன் ஸ்ரீ அன்னையின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் முக்கிய தொகுதிகளின் நல்ல பகுதியும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. மேலும் ஜியார்ஜ்ஸ் வான் வ்ரெக்கமின் “பியான்ட் மேன்“ அல்லது அவரின் “ஆன் ஹிட்லர்“ போன்ற சில “இரண்டாம்நிலை இலக்கியங்களும்“, அத்துடன் சங்கராச்சாரியாரின் சமஸ்கிருத உரைகள் நேரடியாக முதன்முதலில் இரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கிடைக்கப் பெற்றன.

இரஷ்யாவில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுவது இத்திட்டத்தின் முதல் நோக்கமாக இருந்த அக்கட்டத்தை மெதுவாக அடைந்து வருகின்றது, ஆகவே, தற்போது சர்வதேச சந்தையில் மீண்டும் கவனம் செலுத்தப்படுகின்றது. பின்னர் வருணாவைச் சேர்ந்த அணி தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னையின் புகைப்படப் புத்தகம் ஒன்றை தில்லி ஆசிரமத்துடன் இணைந்து வெளியிட்டது. இப்புத்தகம் ஜெர்மனியில் அச்சிடப்பட்டது, அதன் ஆங்கிலப் பதிப்பு இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது, அதன் இரஷ்ய பதிப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து வந்தது. அதேபோல ஸ்ரீ அரவிந்தரின் படங்களுடைய ஒரு புத்தகம் அச்சில் உள்ளது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழியிலுள்ள புத்தகங்கள் முன்பு இரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அவற்றுள் விற்கப்படாமல் எஞ்சியுள்ள பழைய புத்தகங்கள், மீண்டும் பாண்டிச்சேரிக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை இந்த குறிப்பிட்ட வடிவத்தில் – பாக்கெட் பதிப்பு போன்றவை – இங்கே இந்தியாவில் தற்போது இல்லை. அவை இப்போது ஆரோவில், பாண்டிச்சேரி, சென்னை விமானநிலையம் ஆகிய இடங்களில் விற்கப்படுகின்றன.

வருணா வெளியீட்டு பிரிவின் மிகவும் சுவராஸ்யமானது என்னவெனில் புதிய முகப்பில் மின்னணு வடிவங்களில் அது புத்தகங்களைத் தயாரித்து வருகின்றது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் அனைத்து முக்கிய படைப்புகளை, ஆங்கிலம் மற்றும் இரஷ்ய மொழியில் மின் புத்தக வடிவில் நாங்கள் தற்போது மாற்றம்செய்து வருகின்றோம், அவற்றை மின்புத்தகப் பயன்பாடு, ஐ-பேடு பயன்பாடு ஆகியவற்றுக்காக வெளியிட எண்ணியுள்ளோம். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் படங்களை பதிவிறக்கம் செய்வதற்காக ஐ-பேடுக்காக ஆப் (App) ஒன்றை உருவாக்கவும் எண்ணியுள்ளோம்.

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் படைப்புகளை இன்னும் பல வழிகளில் கிடைக்கச் செய்வதற்கும் அல்லது நவீன தீர்வுகள், நல்ல கருவிகள் வாயிலாக வாசகர்கள் அவற்றைத் தொடர்புகொள்ளும் வசதியை அளிப்பதற்கு நாம் உதவமுடியும். இன்னமும் உலகின் பல பகுதிகளில் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறியப்படவில்லை அல்லது அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்படவில்லை. உதாரணமாக சீனா. பல்வேறு நாட்டவர்களைக் கொண்ட ஆரோவில்லின் பிரதிபலிப்பால் வெளியுலகில் புத்தகங்கள் விற்பனை நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீ அரவிந்தரின் முதல் நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒரு முறையான வழியில் இந்தியாவிற்கு வெளியே விற்கப்பட்ட நாடுகள் பிரான்சு, ஜெர்மனி ஆகும். அதனால், பிரான்சு, ஜெர்மனி நாட்டவர் பலர் ஆரோவில்லில் இருக்கின்றார்கள். ஆரோவில்லில் இருக்கும் பல இரஷ்யர்கள் இரஷ்ய மொழி வெளியீடுகளைப் படித்து, தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு இங்கு வந்தவர்கள் ஆவர். உண்மையில், சீன ஆரோவில்வாசிகள் தங்கள் பிரதிபலிப்பை அரிதாகவே செய்துள்ளனர். இன்னமும்கூட ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் நூல்களை மொழிபெயர்த்து சீனாவில் வெளியிடப்படவில்லை.

ஆகவே, நாம் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன